நடிகையின் வரதட்சனை கொடுமை வழக்கு தள்ளுபடி
தமிழ் சினிமாவில் தற்போது முழுநேர நடன இயக்குனரா இருக்கும் காயத்ரி ரகுராம். முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர். இவரது தந்தை பிரபல நடன இயக்குனர் ரகுராம் ஆவார்.
இவர் திருமணம் ஆகி அமெரிக்காவில் குடியேறினார். ஆனால்கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கலிபோர்னியாவில் முறைப்படி விவாகரத்துக் கோரி காயத்ரி ரகுராம் மனு தாக்கல் செய்துள்ளார், மேலும் சென்னை நீதிமன்றத்தில் தனது கணவர் தீபக் மீதும், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் மீதும் வரதட்சனை கொடுமை புகார் தொடர்ந்தார்.
காயத்ரி ரகுராம் தொடர்ந்துள்ள வழக்கிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவரது கணவரின் தந்தை சந்திரசேகர் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார்.
அந்த மனுவில், ’’எனது மகன் தீபக்குக்கும், காயத்ரி ரகுராமுக்கும் அமெரிக்காவில் 28.2.2006 அன்று திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் எங்களது வீட்டில் காயத்ரி தங்கியிருக்கவில்லை. திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆனதும் அவர், எனது மகன் தீபக்குடன் அமெரிக்கா சென்றுவிட்டார்.
அமெரிக்காவுக்கு செல்லும்போது தனது நகை, துணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எடுத்து சென்றுவிட்டார். அங்கு தீபக்குக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
எனவே, காயத்ரி ரகுராமிடமிருந்து விவாகரத்து கேட்டு கலிபோர்னியா சுப்ரீம் கோர்ட்டில் தீபக் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து 22.1.2008 அன்று அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.
ஆனால், எனது மகன் விவாகரத்து கோரிய நிலையில், எங்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, ரகுராம் தூண்டுதலின் பேரில் எங்கள் மீது வரதட்சணை புகார் தாக்கல் செய்யப்பட்டது.
நான் சென்னை அண்ணாசாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகத்தில் தலைமை மேலாளராக பணியாற்றுகிறேன். எனது மனைவி சாவித்திரி வெளிநாட்டில் ஒரு மிகப்பெரிய பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்.
ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்த நாங்கள் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடவில்லை. இந்த வழக்கில் அமெரிக்காவில் இருந்து காயத்ரி ரகுராம் அனுப்பிய எழுத்துபூர்வமான வாக்குமூலம் சேர்க்கப்பட்டுள்ளது.
இது சட்டவிரோதமானது. மேலும், எங்களுக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் காட்டப்படவில்லை. ஆகவே, எங்கள் மீதான வரதட்சணை கொடுமை வழக்கை ரத்து செய்யவேண்டும்’’என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், காயத்ரி ரகுராமின் வரதட்சணை கொடுமை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment