Tuesday, January 2, 2007

இன்று புதிதாய்

இன்று புதிதாய் ..........

நேச நெஞ்சங்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆங்கிலப் புத்தாண்டு கழிந்து, கணினியை திறந்தால் வாழ்த்துக்கள் குவிந்திருக்கின்றன. தபாலிலும், குறுஞ்செய்திகளிலும் அப்படியே.

பதிலெழுதிய வண்ணம் சிந்தை ஓடுகிறது ....

ஒரு வருடம் கடந்து போன வேகம் திகைக்க வைக்கிறது. 2006 பிறந்த ஞாவகம் பசுமையாய் இருக்கிறது. இதோ அடுத்த புத்தாண்டு வந்தாகிவிட்டது.

7வருடங்களுக்கு முன் 2000ம் [year 2000] ஆண்டு பிறக்கும் போது இருந்த ஒரு எதிர்பார்ப்பு, என்ன நடக்குமோ என்ற ஒரு குறுகுறுப்பு, பழைய ஓர்மைகள்... வங்கிக்கணக்கில் பணபாக்கி இருக்குமா, காலையில் மின்சாரம் வருமா என்ற பழம் கேள்விகள் ... எல்லாம்... மனதில் சிரிப்பாய் நிற்கின்றன....

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்

என்று திருவள்ளுவர் சொன்னது இது தானோ ?

இந்த ஒரு ஆண்டில் மட்டுமல்ல, இந்த பத்தாண்டில் என்னென்ன மாற்றங்கள்.

கயிற்று செருப்பு என்று இருந்த சீனா உலக அரங்கில் முந்தியது, சோவியத் ஒன்றியத்தின் முடக்கம், கடந்த சில ஆண்டுகளாய் கடும் விலையேற்றம், பணவீக்கம், ஓரே வல்லரசின் ஆதிக்கம், இணையம் சராசரியானது, பாரதத்தில் வளர்ச்சி, உலகமயமாக்கல் ... என்ன என்ன மாற்றங்கள் ...

.... சனவரி ஒன்றும் சித்திரை ஒன்றும் ?

இப்பொழுதெல்லாம் புத்தாண்டென்றால் ஆங்கிலப் புத்தாண்டு என்றாகிவிட்டது.

விடுமுறையும், பன் நாட்டவர் அனுப்பும் வாழ்த்துக்களும், முக்கியமாய் ஓயாது ஒலிக்கும் தொலைக்காட்சியும், புது வருடம் என்றால் சனவரி ஒன்று என்றாகிவிட்டது.

இரவு முழுதும் ... இதோ ஆஸ்திரேலியாவில், ....அடுத்ததாக ஜகார்தாவில்... இதோ தாய்லாந்தில்... இதோ இந்தியாவில்.. என்று மணிக்கு மணி மண்டைக்குள் மத்தாப்பு வெடிக்கிறது. உலகத்தலைவர்கள் வாழ்த்துச் செய்திகள் அனுப்பியவண்ணம் இருக்கின்றனர்.

கோவாவில் புத்தாண்டுக்கேளிக்கை , மும்பையில் புத்தாண்டுக் கேளிக்கை, நிலவொளியில் கடற்கரையெங்கும் வேடிக்கை, நடனம் .... நட்சத்திர ஓட்டலில் நடனம் என்று ஓயாது ... இது தான் சாக்கென்று தொலைக்கட்சியில் ஆடை குறை நடனங்கள்.

உலகமயமாக்கலில் சிக்கித்தவிக்கும் இந்திய பாரம்பரியம்.....

இம்முறை வெளிநாட்டு ஆடலழகிகள் இந்தியா வந்திருக்கின்றனராம் நள்ளிரவு நடனங்களுக்காக.

நம் நாட்டு பெண்டிரும் சளைக்கவில்லை ... ஒரு மாதரசிக்கு 80 லடசம் சன்மானமாம், இந்த ஓர் இரவு நடனத்துக்காக. இந்தக் கொடுமையை தடுக்கத்தான் முடியுமா ? இதுக்கெல்லாம் வன் கொடுமைச் சட்டம் போன்ற சட்டஙகள் [domestic violence act ] உண்டா ?

பாவம் பாரதி, "...மாதர் தம்மை இழிவுபடுத்தும் .." என்றான்....

இந்த ஆடை குறை நடனங்களை விரும்பி ஏற்பது பெரும்பாலும் மாதர்களே. இவர்கள் சந்தை பொருட்கள் அல்ல. இவர்கள் இதை இழிவாகவே கருதவில்லை. ஒரே இரவில் 80 லட்சம் சம்பாதிப்பவள் ஒரு சந்தையையே விலைக்கு வாங்குபவள் ... அவள் முன் பணம் கொடுத்துவிட்டு கனவில் வாழும் ஆணோ பெண்ணோ விலைபொருள்

சாதரணாமாய் இரவு 10 மணிக்கு உறங்குபவன் கூட கண்விழித்து ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நிற்கிறான். உறங்குபவன் என்றது ஆடவனை மட்டுமல்ல ... பெண்டு பிள்ளைகள் இதே எதிர்பார்ப்பில்....

இதில் வேடிக்கை பாருங்கள், இப்போதெல்லாம் நம் நாட்டு ஆன்மீக குழுக்களும் சளைக்கவில்லை

புத்தாண்டு அன்று இரவில் பஜனை என்கிறார்கள்.

நள்ளிரவில் என்ன நல்ல திதியா ? நல்ல நட்சத்திரமா ? சாதாரணமாய் நள்ளிரவில் 12 மணிக்கு கிழகத்திய நாகரீகங்களில் இறை வழிபாடு இல்லையே, ... காலையில் ஆதவன் உதித்த பின்னோ, மாலையில் நிலவுதித்தபின்னோ நம் நாள் பிறக்கிறது. பின் நள்ளிரவில் என்ன புத்தாண்டு ? இறைவனுக்கும் பள்ளியறை என்று ஓன்று உண்டே ? நள்ளிரவில் கண்விழித்து என்ன இறைத்தேடல் ? நான் நாத்திகன் அல்லன். ஆத்திகனே. பஜனையையோ பூசையையோ எதிர்க்கவில்லை. ஆனால் சனவரி ஒன்று நள்ளிரவில் ? புரியவில்லை

.... எல்லாம் காலவெள்ளம், அயல் நாட்டுவெள்ளம் அடித்துக்கொண்டு போனதுதானோ என்று தோன்றுகிறது ? சித்திரை ஒன்று அதிகாலை பஜனை உண்டா என்று கேள்வி தானாக எழுகிறது ?

பலருக்கு என் கேள்விகள் குதர்க்கமாய் படலாம். மீண்டும் .. நான் இறை வழிபாட்டுக்கோ, பஜனைக்கோ எதிர் அல்ல. ஆனால் ஜனவரி ஒன்று தான் கொஞ்சம் இடிக்கிறது ... எனக்கு சித்திரை ஒன்றே யதார்தமாகவும், நமது வயலுக்கும் வாழ்வுக்கும் ஒப்புவதாகவும், நமது மறபுதிரிகளில் ஒன்றியதாகவும் தோன்றுகிறது...

நாமெல்லாம் பெரிய கோவில் எழுப்பிய காலத்தில், ஒரு கோட்டையோ கொத்தளமோ நல்ல கப்பலோ கூட இல்லாதிருந்த மேலை நாட்டவர் இந்த சில நூற்றாண்டுகளில் வளர்ந்த வேகம் திகைக்க வைக்கிறது.

10 வயதுக் குழந்தை வேட்டியோ தாவணியோ கட்டும் முன் டை கட்டிக் கொள்கிறது. ஆகா, இவன் ஆங்கிலப் படிப்புக்கு எதிரி என்று சிலர் சீறி எழக்கூடும். நிற்க. நான் ஆங்கிலம் கற்றவனே. ஆங்கிலத்தை வெருக்கவில்லை. சங்கதம் கற்ற பாரதியை படிக்காமலிருந்ததில்லை. ஆனால் வேட்டியை அறவே மறந்து, டை கட்டிக்கொள்ளவேண்டுமா ? அதுவும் கொளுத்தும் சென்னை வெய்யிலில், 11 மாசமும் வியர்வை பொங்கும் நகரில் டை தேவையா என்றே கேட்கிறேன் ?

1000 ஆண்டுகள் ஏன் , சமீபத்தில் 1800 களில் திப்பு சுல்தான் பெயரை அமேரிக்க சுதந்திர போராட்டத்தின் வீரர்கள் தம் கப்பலுக்கு இட்டனர். அதை வீரத்தில் பெயராய் கருதினர். நாம் காலத்தில்......

தப்பாக நினைத்து விடாதீர். நான் ஆங்கிலப் புத்தாண்டுக்கு எதிரி இல்லை. பண்டிகை என்பது ஆபாசமற்று இருந்தால், கொண்டாட்டம் மக்களை மேம்பட .. ஒன்றுபடச் செய்தால் நலமே.

ஆனால் பிஸ்ஸாவுக்கு முன் தோசைக்கு என்ன குறை ? பிஸ்ஸாவை போல் தோசையும் உலகம் தழுவிய உணவாகுமா ? அதற்கு நாம் என்ன செய்யலாம் ? என்ன செய்யமுடியும் என்று கனவு காண்பவன் நான்.

ஆகவே சனவரி ஒன்றுக்கு முன் சித்திரை ஒன்று என்னவாயிற்று என்ற சிந்தனைகள் ...

நட்புடன்

சுப்பு